மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பலி
நாலாட்டின்புத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பலியானார்.
நாலாட்டின்புத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி அய்யனாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த கடற்கரை மகன் பொன்பாண்டி (வயது 30). டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு இளையரசனேந்தல் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இளையரசனேந்தல் - திருவேங்கடம் சாலையில் நக்கலமுத்தன்பட்டி அருகே செல்லும் போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்பு பாலத்தின் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து பொன்பாண்டி அருகில் உள்ள ஓடையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.