லாரி, மினி லாரியுடன் மோதல்; டிரைவர் படுகாயம்
சூளகிரி அருகே லாரி, மினி லாரியுடன் மோதிய விபத்தில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சூளகிரி
சூளகிரி அருகே லாரி, மினி லாரியுடன் மோதிய விபத்தில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லாரிகள் மோதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள மார்க்கெட்டில் இருந்து நேற்று மாலை, கொத்தமல்லி மற்றும் புதினா பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு சென்றது. இந்த லாரியை சூளகிரி அருகே தியாகர்சனபள்ளியை சேர்ந்த டிரைவர் வெங்கடேஷ் (வயது35) ஓட்டி சென்றார்.
சூளகிரி சின்னார் அருகே சென்றபோது எதிரே அங்குள்ள வளைவில் ஒரு மினி லாரி வந்தது. அப்போது லாரி, மினி லாரியின் பக்கவாட்டில் மோதியது. இந்த விபத்தில் லாரி இருந்த கொத்தமல்லி மூட்டைகள் நடுரோட்டில் சரிந்து விழுந்தன. மேலும் டிரைவர் வெங்கடேஷ் லாரியில் இடிபாடுகளில் சிக்கி தவித்தார்.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்க முயன்றனர். நீண்ட நேரம் போராடி, வெங்கடேசை அவர்கள் மீட்டனர். விபத்தில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ைவக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்த விபத்து காரணமாக ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சூளகிரி போலீசார் விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.