பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலியான வழக்கில் டிரைவருக்கு 6 மாதம் சிறை
பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலியான வழக்கில் டிரைவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ஐதர்புரத்தைச் சேர்ந்தவர் தசரதன். இவரது மகள் தர்சினி பள்ளிகொண்டாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பு படித்து வந்தாள். தினமும் வீட்டில் இருந்து பள்ளி வேன் மூலம் பள்ளிக்கு சென்று வந்தாள். கடந்த 13.2.2013 அன்று வழக்கம்போல் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய தர்சினி பசுமத்தூரில் பள்ளி வேனில் இருந்து இறங்கியபோது கால்தவறி கீழே விழுந்துவிட்டாள்.
இதை கவனிக்காமல் டிரைவர் வேனை நகர்த்தி உள்ளார். இதில் மாணவி தர்சினி பின்புற டயரில் சிக்கி அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் பலியானாள். இது குறித்த புகாரின் பேரில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குபதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணை காட்பாடி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து நேற்று நீதிபதி ஜெயகணேஷ் தீர்ப்பு கூறினார். அதில் பள்ளி வேன் டிரைவர் பள்ளிகொண்டா நேதாஜி தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் சீனிவாசனுக்கு (37) 6 மாதம் சிறை தண்டனை விதித்தார். இதைத் தொடர்ந்து சீனிவாசன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.