லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தலை துண்டித்து டிரைவர் பலி
அவளூர் அருகே நின்றுகொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தனியார் கம்பெனி டிரைவர் தலை துண்டிக்கப்பட்டு பலியானார். அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவளூர் அருகே நின்றுகொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தனியார் கம்பெனி டிரைவர் தலை துண்டிக்கப்பட்டு பலியானார். அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
டிரைவர் பலி
காஞ்சீபுரம் மாவட்டம் ஆரியபெரும்பாக்கம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயபாபு (வயது 41). ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி அனுஷ்யா (38). இவர்களுக்கு முகேஷ் (13) என்ற மகனும், சோபியா (6) என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் விஜயபாபு மாமியார் வீட்டிற்கு குடும்பத்தினருடன் காஞ்சீபுரத்தில் இருந்து வேலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான பொன்னியம்மன் பட்டறை அருகே வந்த போது, மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விஜயபாபு சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் துடிதுடித்து இறந்து விட்டார்.
3 பேர் காயம்
இவரது மனைவி அனுஷ்யா, மகள் சோபியா, மகன் முகேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த அவளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த மூன்று பேரையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அவசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் பலியான விஜய்பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து அவளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.