சமயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் டிரைவர் பலி


சமயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் டிரைவர் பலி
x

சமயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் டிரைவர் பலியானார். மற்றொரு சம்பவத்தில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் சாக்கடை கால்வாயில் விழுந்து இறந்தார்.

திருச்சி

சமயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் டிரைவர் பலியானார். மற்றொரு சம்பவத்தில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் சாக்கடை கால்வாயில் விழுந்து இறந்தார்.

லாரி டிரைவர்

விருதுநகர் மாவட்டம் கொண்டையன் இருப்பு ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 40). லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு லாரியில் சரக்கு ஏற்றிக்கொண்டு திருச்சி மாவட்டம் லால்குடி வந்தார். பின்னர் அவர் சரக்குகளை இறக்கிவிட்டு மீண்டும் சென்று கொண்டிருந்தார். கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே அகிலாண்டபுரம் என்ற இடத்தில் சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு, லாரியில் இருந்து இறங்கி நடந்து சென்றார்.

அப்போது, லால்குடி அருகே உள்ள தத்தனூரை சேர்ந்த ரமேஷ் மகன் முகேஷ் (23) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மகாலிங்கம் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மகாலிங்கம் இறந்தார். முகேஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரோட்டா மாஸ்டர்

திருச்சி குப்பாங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). இவர் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 7-ந் தேதி மாலை அந்த பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக ரெயில் வந்ததை பார்த்து வேகமாக ஓடினார்.

பதற்றத்துடன் ஓடியதால் அவர் தண்டவாளத்தின் அருகே இருந்த சாக்கடை கால்வாயில் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story