பெண்ணை அரிவாளால் வெட்டிய டிரைவருக்கு 7 ஆண்டு சிறை
தென்தாமரைகுளத்தில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் பெண்ணை அரிவாளால் வெட்டிய டிரைவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
நாகர்கோவில்:
தென்தாமரைகுளத்தில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் பெண்ணை அரிவாளால் வெட்டிய டிரைவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
ரியல் எஸ்டேட் அதிபர்
தென்தாமரைகுளம் சாமிதோப்பை சேர்ந்தவர் சாரா அன்னத்தாய். கடந்த 2016-ம் ஆண்டு இவருடைய 30 வயதுடைய (அப்போதைய வயது) மகளை நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த 45 வயதுடைய ரியல் எஸ்டேட் அதிபர் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார். ஆனால் அதற்கு சாரா அன்னத்தாய் சம்மதிக்கவில்லை. எனினும் ரியஸ் எஸ்டேட் அதிபர் சம்பவத்தன்று தனது கார் டிரைவரான நெல்லை மாவட்டம் கரிசல்பட்டி கீழ உப்பூரணியை சேர்ந்த சார்லின் என்பவரோடு சாரா அன்னத்தாய் வீட்டுக்கு சென்று அவருடைய மகளை பெண் கேட்டார். ஆனால் சாரா அன்னத்தாய் மீண்டும் மறுத்து விட்டார்.
சிறை தண்டனை
இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவர் சார்லின் அரிவாளால் சாரா அன்னத்தாயை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் சாரா அன்னத்தாய் புகார் அளித்தார். அதன்பேரில் சார்லின் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள 2-வது கூடுதல் சார்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி அசன் முகமது விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட டிரைவர் சார்லினுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி அசன் முகமது தீர்ப்பு கூறினார். சார்லினுக்கு தற்போது 32 வயது ஆகிறது. இந்த வழக்கில் அரசு வக்கீல் செந்தில் மூர்த்தி ஆஜராகி வாதாடினார்.