கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்களை சாலையில் நிறுத்தி டிரைவர்கள் போராட்டம்; கூடுதல் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு
கொடைக்கானல் வனப்பகுதியில் கூடுதல் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்றுலா வாகனங்களை சாலையில் நிறுத்தி டிரைவர்கள் போராட்டம் நடத்தினர்.
கொடைக்கானல் வனப் பகுதியில் கூடுதல் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்றுலா வாகனங்களை சாலையில் நிறுத்தி டிரைவர்கள் போராட்டம் நடத்தினர்.
கட்டணம் வசூல்
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. அதில், வனப்பகுதியில் உள்ள மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, குணாகுகை, பில்லர்ராக் ஆகிய சுற்றுலா இடங்கள் முக்கியமானவை. இந்த சுற்றுலா இடங்களுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த சுற்றுலா இடங்களை சுற்றி பார்ப்பதற்கு அந்தந்த இடங்களிலேயே ரூ.10, ரூ.5 என நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த வாரம் வனப்பகுதிக்குள் நுழையும் வாகனங்களுக்கு தலா ரூ.50-ம், சுற்றுலா பயணிகளுக்கு தலா ரூ.30-ம் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு சுற்றுலா வாகன டிரைவர்கள், உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போராட்டம் நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார் மீனா, மீண்டும் பழைய முறைப்படியே கட்டணம் வசூலிக்கப்படும் என்றார். ஆனால் அதற்கு மறுநாளே சுற்றுலா வாகனங்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த சுற்றுலா வாகன டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் நேற்று தங்களது வாகனங்களை மோயர் பாயிண்ட் அருகே சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள், சுற்றுலா இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், உதவி வன பாதுகாவலர் சக்திவேல் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பழைய முறைப்படியே கட்டணம் வசூலிக்க வேண்டும். உள்ளூர் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டண வசூலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். வாரத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் அனைத்து கடைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திய வாகன டிரைவர்கள், உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து மாவட்ட வன அலுவலரிடம் நேரடியாக பேசி தங்களது குறைகளை தீர்க்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
பேச்சுவார்த்தை
பின்னர் மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார் மீனா நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், "வருகிற 28-ந்தேதி முதல் பழைய முறையிலேயே கட்டணம் வசூல் செய்யப்படும். உள்ளூர் வாகனங்களுக்கு நுழைவு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். செவ்வாய்க்கிழமைகளில் கடைகள் அனைத்தும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் சுற்றுலா இடங்களில் வாகன நிறுத்தும் இடம், கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்" என்றார். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் வனப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.