சோதனை சாவடியை அகற்றக்கோரி டிரைவர்கள் போராட்டம்
தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் உள்ள சோதனை சாவடியை அகற்றக்கோரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி பகுதியில் உள்ள சோதனைச்சாவடி அருகே அனைத்து வாகன ஓட்டுனர் தொழிற்சங்கம் மற்றும் தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுனர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர்கள் நாராயணன், முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
அரசு அதிகாரிகள், டிரைவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. தமிழ்நாடு -கர்நாடக எல்லை பகுதியான அத்திப்பள்ளி பகுதியில் உள்ள கர்நாடக மாநில சோதனைச் சாவடியை அகற்ற வேண்டும், டிரைவர்களுக்கு எதிரான மோட்டார் வாகன சட்டத்தை மாற்ற வேண்டும்.
டிரைவர்கள் தபால் ஓட்டு செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 25 கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்தும், கருப்பு கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு 25 கோரிக்கைகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
அம்பலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.