சாலையை மறித்து பஸ்களை நிறுத்தி தகராறில் ஈடுபட்ட டிரைவர்கள்
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் முன் சாலையை மறித்து பஸ்களை நிறுத்திதகராறில் ஈடுபட்ட டிரைவர்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் முன் சாலையை மறித்து பஸ்களை நிறுத்திதகராறில் ஈடுபட்ட டிரைவர்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய ரவுண்டானா அருகில் மன்னார்புரம் வழித்தடத்திலும், பாலக்கரை வழித்தடத்திலும் திருப்பத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குவதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. குறிப்பாக தனியார் பஸ்கள் சாலையின் நடுவில் நிறுத்தி ஆட்களை ஏற்றி, இறக்குவதால் பின்னால் வரும் பெரிய வாகனங்கள் செல்ல முடிவதில்லை.
இதனால் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் 4 திசைகளிலும் அணிவகுத்து நிற்கின்றன. குறிப்பாக மாலை முதல் இரவு வரை ரெயில்கள் தொடர்ச்சியாக வந்து செல்லும் நேரத்தில் ரெயில் நிலையம் முன் உள்ள சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
நடுரோட்டில் தகராறு
இந்தநிலையில் நேற்று மாலை 3.30 மணி அளவில் தனியார் பஸ் டிரைவர் ஒருவர் சாலையின் நடுவில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்தார். பின்னால் வந்த மற்றொரு தனியார் பஸ் அந்த பஸ்சை கடந்து சென்ற போது, அதன் கண்ணாடி உடைந்ததாக தெரிகிறது. அந்த பஸ்சின் டிரைவர் பஸ்சை நடுரோட்டில் நிறுத்தினார்.
இரு பஸ் டிரைவர்களும் நடுரோட்டில் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். அதேநேரம் மற்றொரு பஸ்சும் அந்த இடத்தில் வந்து நின்றது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு வழியாக பொதுமக்கள் அவர்களை சமரசம் செய்து அனுப்பிவைத்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.