குடும்பத்தினருடன் டிரைவர்கள் உண்ணாவிரதம்
மசினகுடி ஊராட்சி கிராம சாலைகளில் வாகன சவாரி செய்ய வனத்துறையினர் தடை விதித்ததை கண்டித்து, குடும்பத்தினருடன் டிரைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்,
மசினகுடி ஊராட்சி கிராம சாலைகளில் வாகன சவாரி செய்ய வனத்துறையினர் தடை விதித்ததை கண்டித்து, குடும்பத்தினருடன் டிரைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சவாரி செய்ய தடை
முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடி ஊராட்சியில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் உள்ளதோடு, சுற்றுலா சார்ந்த தொழில்கள் நடைபெற்று வருகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால் வாகன சவாரியும் நடந்து வருகிறது. இதை சார்ந்து 200-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் உள்ளனர்.
இந்தநிலையில் ஊராட்சி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் வன சாலைகளை வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது என வனத்துறையினர் சவாரி தொழிலில் ஈடுபட்டுள்ள டிரைவர்களுக்கு கடிதம் வழங்கினர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக டிரைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து வனத்துறையின் உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
கொட்டும் மழையில் உண்ணாவிரதம்
இந்தநிலையில் வனத்துறையின் உத்தரவை கண்டித்தும், ஊராட்சி மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க கோரியும் மசினகுடி பஜாரில் வாகன டிரைவர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்பட பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் நேற்று கொட்டும் மழையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கையில் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு உண்ணாவிரதம் இருந்தனர். தொடர்ந்து மசினகுடியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. மேலும் வாகனங்களும் இயக்கப்படாததால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடியது.
இதுகுறித்து வாகன டிரைவர்கள், வியாபாரிகள் கூறியதாவது:-
பல்வேறு வன சட்டங்களால் நாளுக்கு நாள் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலம், கிராம சாலைகளில் சுற்றுலா பயணிகளை சவாரிக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்ற உத்தரவு காரணமாக வாகன சவாரி மட்டுமின்றி அனைத்து வகையான தொழில்களும் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.