கீரப்பாளையத்தில் டிரைவர்கள் திடீர் சாலை மறியல்


கீரப்பாளையத்தில்  டிரைவர்கள் திடீர் சாலை மறியல்
x

கீரப்பாளையத்தில் வேன் டிரைவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர்

புவனகிரி,

புவனகிரி பேருந்து நிலையத்தில் பஸ்களுக்கு இடையூறாக வேன்கள் நிறுத்தப்படுவதாக கூறி, அங்குள்ள வேன்களை கீரப்பாளையம் பாலம் அருகில் நிறுத்துமாறு போலீசார் கூறினர். இதையடுத்து கீரப்பாளையம் பாலம் அருகில் வேன்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் அந்த இடம் போதுமானதாக இல்லாததால், அதிகளவு வேன்கள் நிறுத்தக்கூடிய இடங்களை ஒதுக்கீடு செய்யுமாறு போலீசாரிடம் வேன் டிரைவர்கள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அருகில் உள்ள இடங்களில் வேன்களை நிறுத்திக்கொள்ளுமாறு போலீசார் கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அங்கு வேன்கள் நிறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அந்த இடத்தில் மாலை நேரத்தில் சூப் கடை நடத்தி வருபவர்கள், இங்கு வேனை நிறுத்த அனுமதிக்க மாட்டோம். இங்கே வேனை நிறுத்தினால், நாங்கள் எங்கே தொழில் செய்வது என டிரைவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த கீரப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கீரன் சம்பவ இடத்திற்கு வந்து ஊராட்சி நிர்வாகம் அனுமதி இல்லாமல் வேன்கள் நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறினார். இதனால் டிரைவா்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வேன் டிரைவர்கள் சிதம்பரம்-கடலூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற டிரைவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story