மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்
செல்போன் பேசிக்கொண்டும், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.
செல்போன் பேசிக்கொண்டும், மதுபோதையிலும் வாகனம் ஓட்டுவதை வாகன ஓட்டிகள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடியில் செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி, விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மது போதையில்...
இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று விபத்து ஏற்பட்டு இளைஞர்கள் அதிகம் பேர் உயிரிழக்கின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அதிவேக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் அதிக விபத்துகள் நடக்கின்றன.
மது குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலை கவசம் அணிவது, நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவது போன்ற சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும்.
விபத்தில்லா மாவட்டம்
இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்குவதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள், போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.