கொள்ளிடம் ஆற்றில் 3 மணல் குவாரிகளில் டிரோன் கேமரா மூலம் ஆய்வு


கொள்ளிடம் ஆற்றில் 3 மணல் குவாரிகளில் டிரோன் கேமரா மூலம் ஆய்வு
x

கொள்ளிடம் ஆற்றில் 3 மணல் குவாரியில் டிரோன் கேமரா மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர்,

தமிழ்நாட்டில் ஆறுகளில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளில் அரசு விதிமுறைகளின்படி மணல் அள்ளப்படுகிறதா? என்பது குறித்து மணல் குவாரிகளில் ஆய்வு செய்தனர். மேலும் மணல் குவாரிகளை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த மாதம் 12-ந்தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையின் ஒரு அங்கமாக நேற்று காலை தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கோவிலடியில் கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வந்த மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். துப்பாக்கி ஏந்திய மத்திய போலீசார் பாதுகாப்புடன் இந்த சோதனை நடந்தது.

டிரோன் கேமரா மூலம் ஆய்வு

தமிழ்நாடு நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் உடன் வர கோவிலடி மணல் குவாரி பகுதிக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரி செயல்பட்ட இடங்கள் குறித்த அடையாளம் இடப்பட்ட பகுதிகளில் அரசு நிர்ணயித்த ஆழத்தில் மணல் அள்ளப்பட்டுள்ளதா? என்பதை டிரோன் கேமராவை பறக்கவிட்டு படம் எடுத்தனர்.

இதற்காக சக்தி வாய்ந்த டிரோன் கேமரா கொண்டு வரப்பட்டு இருந்தது. அந்த டிரோன் கேமராவை கையாளுவதற்கு உரிய தொழில்நுட்ப வல்லுனர்கள் உடன் வந்து இருந்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆய்வு நடந்தது. ஆய்வை முடித்துக்கொண்டு அவர்கள், தாங்கள் வந்த கார்களில் ஏறி அங்கிருந்து சென்று விட்டனர்.

இதேபோல கொள்ளிடம் ஆற்றில் திருவையாறை அடுத்த மருவூரில் அமைந்துள்ள மணல்குவாரி, பட்டுக்குடியில் உள்ள மணல் குவாரியிலும் மணல் எடுக்கப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.


Next Story