குருந்தன்கோடு வட்டாரத்தில் நெற்பயிரில் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்த டிரோன் மூலம் மருந்து தெளிப்பு
குருந்தன்கோடு வட்டாரத்தில் நெற்பயிரில் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்த டிரோன் மூலம் மருந்து தெளிக்கப்பட்டது.
அழகியமண்டபம், செப்.29-
குருந்தன்கோடு வட்டாரத்தில் நெற்பயிரில் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்த டிரோன் மூலம் மருந்து தெளிக்கப்பட்டது.
நெற்பயிர்
குருந்தன்கோடு வட்டாரத்தில் 600 எக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. 100 எக்டர் பரப்பில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 500 எக்டர் பரப்பில் பயிர் பொதி பருவம், கதிர் வெளிவரும் பருவம் மற்றும் பால் பிடிக்கும் பருவம் என வெவ்வேறு பருவங்களில் உள்ளது. மணவாளக்குறிச்சி பெரியகுளம் ஏலாவில் 189 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிரில் 2 எக்டர் பரப்பில் குலை நோயின் தாக்கம் காணப்படுகிறது. கணுவின் கழுத்து பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள குலை நோயினால் வயலில் ஆங்காங்கே கதிர்கள் முழுவதும் சாவியாகி உள்ளது.
இந்நோய் காற்று மூலம் மிகவும் வேகமாகப் பரவக்கூடியது. கணு கழுத்து பகுதியில் சாம்பல் நிறப்புள்ளிகள் தோன்றி கணு பகுதியிலிருந்து கதிருக்கு செல்லும் உணவு தடைப்படுவதால் கதிர்கள் முழுமையாக சாவி ஆகிறது. மேகமூட்டம் உள்ள வானம், தொடர் மழை, தூரல்கள், காற்றின் அதிக ஈரப்பதம், அதிக பனிப்பொழிவு, ஈரமான இலைகள் மற்றும் பயன்படுத்தப்படும் அதிக தழைச்சத்து உரங்கள் ஆகியன இந்நோய் வேகமாக பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கிறது. தற்போது லேசான தூரல் மழை அவ்வப்போது இரவில் பெய்வது காரணமாக இலைகள் ஈரத்தன்மையுடன் காணப்படுகிறது.
டிரோன் மூலம் மருந்து தெளிப்பு
எனவே காற்றில் உள்ள பூசண வித்துக்கள் இந்த நோயை பரப்புவதற்கு உகந்த சூழ்நிலை காணப்படுகிறது. வேளாண்மை துறை மூலம் விவசாயிகளிடம் நோயின் மூலம் ஏற்படும் தீவிர பாதிப்பு விளக்கி கூறப்பட்டது. மேலும், உடனே அசாக்ஸிதிரோபின் 25 எஸ்.சி.- 200 மில்லி ஏக்கருக்கு தெளித்திட பரிந்துரை செய்து டிரோன் மூலம் பாதிக்கப்பட்ட வயலில் தெளிக்கப்பட்டது. பெரியகுளம் ஏலா பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் உடனே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள குருந்தன்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.