மிளகாய் வத்தல் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை


மிளகாய் வத்தல் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் பகுதியில் மிளகாய் வத்தல் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் பகுதியில் மிளகாய் வத்தல் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

மிளகாய் சாகுபடி

கடந்த நவம்பர் மாதத்தில் மிளகாய் சீசன் தொடங்கியதை தொடர்ந்து முதுகுளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேலதூவல், திருவரங்கம், விளங்குளத்தூர், சவேரியார்பட்டினம், மிக்கேல்பட்டினம், தட்டியாரேந்தல் மல்லல், ஆலங்குளம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வந்தனர். ஆனால் இந்த ஆண்டு பருவமழை சீசனில் மழை பெய்யாததாலும், மிளகாய் செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகம் இருந்ததாலும் மிளகாய் விளைச்சல் அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு புறம் நோய் தாக்குதலால் மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் மறுபுறம் இந்த ஆண்டு விலையும் குறைந்துள்ளது.

மிளகாய் வத்தல் விலை குறைவு

இது குறித்து மிளகாய் விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த ஆண்டு மிளகாய் விளைச்சல் எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருந்தது. 10 கிலோ மிளகாய் வத்தல் ரூ.3500 வரை விலை போனது. ஆனால் இந்த ஆண்டு மழையே பெய்யாததாலும் பூச்சி தாக்குதல் அதிகம் இருந்ததாலும் மிளகாய் விளைச்சல் என்பது மிக மிக குறைவுதான். அதுபோல் மிளகாய் விலையும் குறைந்துவிட்டது.

இந்த ஆண்டு மிளகாய் வத்தல் 10 கிலோ ரூ.2200-க்கு மட்டும் தான் விலை போனது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

எனவே வருகின்ற ஆண்டுகளில் சாகுபடி செய்யப்படும் மிளகாய்க்கு அரசே விவசாயிகளிடம் நேரடியாக கருத்து கேட்டு நல்ல விலை நிர்ணயம் செய்தால் கஷ்டப்பட்டு விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story