காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் குறைந்துள்ளது


காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் குறைந்துள்ளது
x

காலை உணவு வழங்கும் திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் குறைந்து உள்ளது என்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.

வேலூர்

மாணவர் சேர்க்கை

வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, 2-வது மண்டலக்குழு தலைவர் நரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை நளினி வரவேற்றார்.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி முதலாம் வகுப்பில் சேருவதற்காக பள்ளிக்கு வந்த சிறுவனுக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்று மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். பின்னர் அந்த சிறுவனின் பெயர், அ, ஆ எழுத மற்றும் படிக்க தெரியுமா? என்பது உள்பட சில கேள்விகள் கேட்டு சிறிதுநேரம் கலந்துரையாடினார். தொடர்ந்து அந்த மாணவனுக்கு நோட்டு, புத்தகம், புத்தகப்பை, எழுதுகோல் ஆகியவற்றை வழங்கினார். அதைத்தொடர்ந்து மற்ற மாணவ-மாணவிகளின் சேர்க்கை நடைபெற்றது.

இடைநிற்றல் குறைந்து உள்ளது

தொடர்ந்து அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு கலெக்டர் வழங்கினார்.

பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் அதிகளவு சேர வேண்டும் என்பதற்காக காலை மற்றும் மதிய உணவு, விலையில்லா நோட்டு, புத்தகங்கள், புத்தகப்பை உள்பட 14 வகையான விலையில்லா நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 85 தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலை உணவு தரமாகவும், சுவையாகவும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தினால் பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் இடைநிற்றல் குறைந்துள்ளது என்றார்.

இதில், வேலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தயாளன், வார்டு கவுன்சிலர் மம்தாகுமார், 2-வது மண்டல உதவிகமிஷனர் சுதா, வேலூர் தாசில்தார் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சாலை அமைக்க உத்தரவு

மாணவர் சேர்க்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஆற்காடு சாலை வழியாக காகிதப்பட்டறை நடுநிலைப்பள்ளிக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் காரில் வந்தார். பாதாள சாக்கடை பணியால் குண்டும், குழியுமாக சாலை காணப்பட்டது. மேலும் சாலையில் இருந்து தூசி பறந்து வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். இதைக்கண்ட கலெக்டர் பள்ளிக்கு வந்தவுடன் 2-வது மண்டல உதவிகமிஷனர் சுதாவை அழைத்து ஆற்காடு சாலையில் ஏன் சாலை அமைப்படவில்லை. எப்போது சாலை அமைக்கப்படும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் உரிய பதில் அளிக்கவில்லை.

இதையடுத்து அவர் 2-வது மண்டல உதவிபொறியாளரிடம் இதுதொடர்பான தகவல்களை பெற அவரை அழைத்தார். ஆனால் அவர் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. இதையடுத்து அவரை செல்போனில் தொடர்பு கொண்டு வரவழைக்கும்படி கலெக்டர் கூறினார். ஆனால் அவர் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. நிகழ்ச்சிக்கு பின்னர் சாலையை பார்வையிட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், வேலூர்-ஆற்காடு சாலையில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து 2 மாதத்துக்குள் தார்சாலை அமைக்க வேண்டும். மேலும் பள்ளியின் அருகே சாலையில் கட்டாயம் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று மேயர் சுஜாதா மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறினார்.


Next Story