நண்பர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு-பா.ஜனதா பிரமுகர் உள்பட 4 பேர் கைது


நண்பர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு-பா.ஜனதா பிரமுகர் உள்பட 4 பேர் கைது
x

நெல்லையில் பெண் விவகாரத்தில் நண்பர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது தொடர்பாக பா.ஜனதா பிரமுகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லையில் பெண் விவகாரத்தில் நண்பர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது தொடர்பாக பா.ஜனதா பிரமுகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நண்பர்கள்

நெல்லை டவுன் கோடீசுவரன் நகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 35). இவருடைய நண்பர் டவுன் தடிவீரன் கோவில் தெருவை சேர்ந்த கலை.

இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு டவுன் குற்றாலம் ரோட்டில் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்காக தங்களது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தினர்.

கொல்ல முயற்சி

அப்போது அங்கு ஒரு காரில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் வெடி பொருட்களை அய்யப்பன் மற்றும் கலை மீது வீசினர். ஆனால் அவர்கள் மீது படாமல் ரோட்டில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதைத்தொடர்ந்து மர்ம கும்பல் காரில் இருந்து இறங்கி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 2 பேரையும் வெட்டிக் கொலை செய்ய முயற்சி செய்தனர். ஆனால் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து அந்த கும்பல் காரில் தப்பி சென்றது.

நாட்டு வெடிகுண்டு

உடனடியாக மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தடயவியல் அதிகாரிகள் சென்று மர்ம கும்பல் வீசியதில் வெடித்து சிதறி கிடந்த பொருட்களை சேகரித்து ஆய்வு செய்தனர். இதில் அந்த பொருட்கள் கல் வெடி மருந்து, சீனி கற்கள் மற்றும் பால்ரஸ் குண்டுகளால் தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக அய்யப்பன், கலை ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

பெண் விவகாரம்

அப்போது, இந்த சம்பவத்தில் ஈடுபட்டது டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூலித்துரை மற்றும் அவருடைய உறவினர்களான இசக்கி மணி, அஜித்குமார், ராஜேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் 4 பேரையும் அதிரடியாக பிடித்தனர். பின்னர் அவர்களை நெல்லை டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பா.ஜனதா பிரமுகரான பூலித்துரைக்கும், அய்யப்பனுக்கும் இடையே ஒரு பெண் விவகாரம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பூலித்துரை, அவரது உறவினர்களுடன் அய்யப்பனை கொலை செய்ய முடிவு செய்து நாட்டு வெடிகுண்டு வீசி உள்ளார். அப்போது உடனிருந்த அவரது நண்பர் கலையையும் கொலை செய்ய முயன்றுள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

4 பேர் கைது

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பூலித்துரை உள்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story