வறட்சியால் பாதிக்கப்பட்டவிவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாலாட்டின்புத்தூர்:
நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள பெருமாள் பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிளை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சின்னப்பன் தலைமை தாங்கினார். விவசாய சங்க கொடியை கோட்டியப்பன் ஏற்றி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் லெனின்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன், தாலுகா பொருளாளர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் 2022- 2023-ம் ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். கோவில்பட்டியை வறட்சி பாதித்த தாலுகாவாக அரசு அறிவிக்க வேண்டும். 2022- 2023-ம் ஆண்டுக்கான பயிர்காப்பீடு தொகையை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வலியுறுத்தி வரும் 12-5-2023 அன்று விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி கிளை தலைவராக கண்ணன், செயலாளராக குருசாமி, பொருளாளராக அய்யலுசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.