கருவேப்பிலங்குறிச்சி அருகே வெள்ளாற்றில் மூழ்கிய விவசாயி தேடும் பணி தீவிரம்
கருவேப்பிலங்குறிச்சி அருகே வெள்ளாற்றில் மூழ்கிய விவசாயியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பெண்ணாடம்,
கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள பாசிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மணி (வயது 65). நேற்று இவர், தனது 2 பசுமாடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள வெள்ளாறு கரைப்பகுதிக்கு ஓட்டி சென்றார்.
அப்போது 2 மாடுகளும், ஆற்று நீரில் இறங்கி வெளியே வரமுடியாமல் தவித்தது. இதை பார்த்த மணி, அந்த பகுதியில் நின்றிருந்த ஆறுமுகம்(60) ஆகியோர் ஆற்றில் இறங்கி மாடுகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் ஆறுமுகம் 2 மாடுகளையும் மீட்டு கரைக்கு ஓட்டிவந்தார். ஆனால், மணி நீரில் மூழ்கினார். ஆறுமுகம் அவரை தேடியும், அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த, ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் விரைந்து வந்து, தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 9 மணி வரைக்கும் தேடுதல் பணி தீவிரமாக நடந்த போதும், அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து தேடுதல் பணியை நிறுத்திக்கொண்ட வீரர்கள், இன்று மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபடுவதாக தெரிவித்து சென்றனர். மேலும் சம்பவ இடத்துக்கு திட்டக்குடி தாசில்தார் கார்த்திக் மற்றும் கருவேப்பிலங்குறிச்சி போலீசாரும் நேரில் வந்து விசாரித்தனர். மணியின் நிலை என்ன என்று தெரியாததால், அவரது குடும்பத்தினர் பரிதவித்துள்ளனர்.