சுத்தமல்லி அணைக்கட்டில் மூழ்கி 7 மாத குழந்தை-சிறுமி பலி
நெல்லை அருகே சுத்தமல்லி அணைக்கட்டில் மூழ்கி 7 மாத குழந்தை-சிறுமி பரிதாபமாக இறந்தனர்
பேட்டை:
நெல்லை அருகே சுத்தமல்லி அணைக்கட்டில் மூழ்கி 7 மாத குழந்தை-சிறுமி பரிதாபமாக இறந்தனர்.
ஜவுளிக்கடை ஊழியர்
நெல்லையை அடுத்த சுத்தமல்லி பெரியார் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் கண்ணன் (வயது 32). இவர் நெல்லை டவுனில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மாரியம்மாள் (30). இவர்களுக்கு மாதுரிதேவி (4) என்ற மகளும், நிரஞ்சனி என்ற 7 மாத கைக்குழந்தையும் இருந்தனர்.
நேற்று காலை சிறுமி மாதுரிதேவி தாமிரபரணி ஆற்றை பார்க்க வேண்டும் என்று தனது தாய் மாரியம்மாளிடம் கூறினாள். இதனால் மாரியம்மாள் தனது குழந்தைகளுடன் ஆட்டோவில் சுத்தமல்லி அணைக்கட்டை பார்க்க சென்றார்.
ஆற்றில் தவறி விழுந்தாள்
அங்கு அணைக்கட்டு பகுதியில் அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மாதுரிதேவி நிலை தடுமாறி அணையில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து பதறிப்போன தாய் மாரியம்மாள் கைக்குழந்தை நிரஞ்சனியுடன் அணையில் குதித்து மாதுரிதேவியை காப்பாற்ற முயன்றார்.
அப்போது கைக்குழந்தை தண்ணீரில் மூழ்கியதில் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தது. மாதுரிதேவியை தொடர்ந்து தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பிணமாக மீட்பு
இதுகுறித்து உடனடியாக பேட்டை, சேரன்மாதேவி தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நிலைய அதிகாரிகள் வரதராஜ், முத்தையா ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சிறுமி மாதுரிதேவியை தேடும் பணியில் ஈடுபட்டனர். தீவிர தேடுதலுக்கு பிறகு சுத்தமல்லி அணைக்கட்டு மதகில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் சிறுமி பிணமாக மீட்கப்பட்டாள்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை அருகே சுத்தமல்லி அணைக்கட்டில் மூழ்கி 7 மாத கைக்குழந்தை, சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.