போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட காவல்துறை மற்றும் ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பஸ் நிலையத்திற்கு வந்து முடிவடைந்தது. முன்னதாக தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் அனைவரையும் வரவேற்றார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், ராஜசேகர், இளங்கோவன் ரமேஷ் உள்ளிட்ட போலீசார்கள், பொதுமக்கள், நர்சிங் கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து அவர்கள் போதை பொருள்களுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முடிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் நன்றி தெரிவித்தார்.