ரூ.3½ லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்
பள்ளிகொண்டா அருகே ரூ.3½ லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் 4 ஏ.டி.எம். மையங்களில் எந்திரங்களை உடைத்து ரூ.72 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றதை தொடர்ந்து போலீசார் வாகன தணிக்கை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை 4 மணி அளவில் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் வெட்டுவானம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த ஒரு காரை மடக்கி டிரைவரிடம் விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். காரின் பின் பக்கம் மூட்டைகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜலம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கேராராம் என்பவரது மகன் சுஜானராம் (வயது 21) என தெரிய வந்தது. மேலும் காரில் 25 மூட்டைகளில் இருந்த 500 கிலோ ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த கார் கடந்த சிலநாட்களில் 27 முறை சுங்குச்சாவடியை கடந்த சென்றுள்ளது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனை அடுத்து சுஜானாராம் மீது வழக்குப் பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.