காவல்துறை சார்பில் போதை, காவல் நண்பன் குறும்படங்கள்; போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டார்


காவல்துறை சார்பில் போதை, காவல் நண்பன் குறும்படங்கள்; போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டார்
x

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போதை மற்றும் காவல் நண்பன் ஆகிய 2 விழிப்புணர்வு குறும்படங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போதை மற்றும் காவல் நண்பன் ஆகிய 2 விழிப்புணர்வு குறும்படங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டார்.

குறும்படங்கள்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கஞ்சா, மதுபானம் மற்றும் புகையிலை போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதை என்ற குறும்படமும், பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் காவல்துறையின் அவசர உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் நண்பன் என்ற குறும்படமும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த குறும்படத்தின் வெளியீட்டு விழா காமராஜ் கல்லூரியில் நடந்தது. விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலந்து கொண்டு குறும்படங்களை வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

சாதனையாளர்களாக...

மாணவ-மாணவிகளாகிய உங்களுக்கு கல்வி தான் முக்கியமானதாக இருக்க வேண்டும். விளையாட்டில் எல்லைக்கு உட்பட்டு விதிமுறைகளை கடைபிடித்து விளையாடினால் வெற்றிபெற முடியுமோ, அதேபோல் வாழ்க்கையிலும் நமக்கென்று எல்லைகளை வகுத்து சில விதிமுறைகளை கடைபிடித்து குறிக்கோள்களை அடைந்தால் நமது வாழ்க்கை சிறப்பாக அமையும். சமூகத்தில் உயரிய பதவியில் இருப்பவர்கள் பலர் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். உங்களுடைய திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். மேலும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள வேண்டாம். போதைக்கு அடிமையாகாமல் தங்களை நல்ல செயல்களில் ஈடுபடுத்தி சிறப்பாக கல்வி பயின்று சாதனையாளர்களாக வரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ், காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேசிய சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், திரைப்பட துறை தயாரிப்பாளர் மற்றும் செயல் இயக்குனர் மதன், இயக்குனர் சாம்ராஜ், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் உள்பட காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story