போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு, மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை சென்று முடிவடைந்தது. இந்த ஊர்வலம் மூலம் பொதுமக்கள் உரிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். ஊர்வலத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, உதவி ஆணையர் (கலால்) (பொறுப்பு) சத்தியபாலகங்காதரன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, தாசில்தார் (கலால்) முத்துகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மீன்சுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் தலைமை ஆசிரியர்(பொறுப்பு) சின்னப்பராஜ் தலைமையில் நடைபெற்றது. ஊர்வலத்தை மீன்சுட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
செந்துறை போலீஸ் நிலையம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை இன்ஸ்பெக்டர் சித்ரா தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்டவர்கள் போதை பொருளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வீராசாமி தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகள் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர்.