பள்ளிகளில் போதை தடுப்பு குழு; கலெக்டர் விஷ்ணு தகவல்


பள்ளிகளில் போதை தடுப்பு குழு; கலெக்டர் விஷ்ணு தகவல்
x

நெல்லை மாவட்ட பள்ளிகளில் போதை பொருட்கள் தடுப்பு குழு அமைக்கப்படுகிறது என்று கலெக்டர் விஷ்ணு கூறினார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட பள்ளிகளில் போதை பொருட்கள் தடுப்பு குழு அமைக்கப்படுகிறது என்று கலெக்டர் விஷ்ணு கூறினார்.

விழிப்புணர்வு கூட்டம்

நெல்லை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் போதை பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம், அனைத்து பள்ளிகளையும் ஒருங்கிணைத்து காணொலி காட்சி மூலம் மாணவர்களிடையை விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார்.

அப்போது கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-

போதை தடுப்பு குழு

நாடு முழுவதும் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு போதை பொருட்கள் கடத்தல் தடுக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் போதை பழகத்துக்கு அடிமையாவதை தடுக்கும் வகையில் தமிழகத்திலேயே முதன்முறையாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போதை தடுப்பு குழு அமைக்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரி, பள்ளிகளில் மாணவர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்கும் வகையில் போதை தடுப்பு குழு என்ற அமைப்பு, நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை போன்று இந்த குழுவும் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். மேலும் 14446, 1098 என்ற போதை தடுப்பு விழிப்புணர்வு எண்களும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

குண்டர் சட்டம்

அதுபோன்று பள்ளி, கல்லூரிகளின் அருகில் உள்ள கடைகளில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து போதைப்பொருள் விற்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

உறுதி மொழி ஏற்றனர்

இந்த காணொலி மூலம் மாவட்டத்தில் 318 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நேரடியாக கலெக்டர் அலுவலகத்தில் 100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் போதை பொருள் பயன்பாட்டுக்கு எதிரான உறுதி மொழி ஏற்றனர். கூட்டத்தில், நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சரவணகுமார், சீனிவாசன், ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட அலுவலர் சந்திரகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலபிரிவு) ஷேக் அயூப், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர் யுவராஜ், கல்லூரி உளவியல் துறை தலைவர் ஸ்ரீநிதி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அருட்செல்வி, தேசிய தகவல் மைய மேலாளர்கள் ஆறுமுகநயினார், தேவராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story