ஆதரவற்றோர் ஆசிரமத்தில் போதை மருந்து கொடுத்து கற்பழிப்பு: நிர்வாகியின் மனைவி உள்பட 8 பேர் கைது
விக்கிரவாண்டியில் ஆதரவற்றோர் ஆசிரமத்தில் போதை மருந்து கொடுத்து பெண்களை கற்பழித்த வழக்கில் நிர்வாகியின் மனைவி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆதரவற்றோர் ஆசிரமம் இயங்கி வருகிறது. கேரளாவை சேர்ந்த ஜூபின் பேபி(வயது 45) என்பவர் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.
இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் என பலர் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இங்கு திருப்பூரை சேர்ந்த ஹனிதீன் என்பவர், கடந்த 2021-ம் ஆண்டு ஜாபருல்லா(45) என்பவரை சேர்த்தார். இதன்பின்னர் ஹனிதீன் அமெரிக்கா சென்றுவிட்டார். அதன்பின்னர் கடந்த ஆண்டு (2022) அவர் இந்தியா திரும்பி வந்தார்.
புகாரை ஏற்க போலீஸ் மறுப்பு
அப்போது ஆசிரமத்தில் சேர்த்த ஜாபருல்லாவை நேரில் பார்க்க சென்றார். அப்போது, ஆசிரம உரிமையாளர் ஜூபின் பேபி இட பற்றாக்குறையால் பெங்களூருவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு ஜாபருல்லாவை இடமாற்றம் செய்து உள்ளோம். அங்கு சென்று பாருங்கள் என்று கூறினார்.
அவர் கூறியபடி அங்கு சென்று பார்த்தபோது, ஜாபருல்லாவை காணவில்லை. இதுகுறித்து மீண்டும் குண்டலப்புலியூர் வந்து, கேட்டார். அப்போது, ஆசிரமத்தினா் இங்கிருந்து 50 பேர் மாயமாகி விட்டனர். அதில் ஜாபருல்லாவும் ஒருவர் என்று தெரிவித்தனர். ஆசிரமம் தரப்பில் அளித்த பதில்கள் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை.
இது தொடர்பாக போலீசில் ஹனிதீன் புகார் அளித்தார். ஆனால் போலீசார் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர்.
பாலியல் பலாத்காரம்
இதையடுத்து அவர், சென்னை ஐகோா்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவு படி, வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் கடந்த 10-ந்தேதி, ஆய்வு செய்தனர். ஆய்வின்போது பணியாளர்கள் 27 பேர் உள்பட 184 பேர் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை மற்றும் அவர்களுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
சங்கிலியால் கட்டிப்போட்டு கொடுமை
இதுகுறித்து, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, ஆசிரமத்தில் தங்கி இருந்த கொல்கத்தாவை சேர்ந்த பெண் ஆகியோர் போலீசில் தனித்தனியே புகார் அளித்து உள்ளனர். இதில் தங்கவேலு அளித்த புகாரில், 'மனநல காப்பகம் உரிய அனுமதி பெறாமல் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு தனிநபரின் விருப்பம் இல்லாமல், அவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு மொட்டை அடித்து, உடல் ரீதியாக அசிங்கப்படுத்தி, அவர்களது குடும்பத்தினர் எந்தவிதத்திலும் தொடர்பு கொள்ள முடியாத வகையில், வெளியே விடாமல் அடைத்து வைத்து உள்ளனர்.
அவர்களை சங்கிலியால் கட்டிப்போட்டு, சரியான மருத்துவசிகிச்சை, உரிய உணவு வழங்காமல் இருந்துள்ளனர். பெண்களை அடித்து கொடுமைப்படுத்தி, பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். மேலும் அங்கு உள்ளவர்களை வியாபார ரீதியாக வேறு மாநிலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு விற்பனை செய்து, கடத்தும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் ஆசிரமம் மீது சந்தேகம் எழுகிறது.
அரசு விதிமுறைகளை பின்பற்றாமலும், பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
13 பிரிவுகளின் கீழ் வழக்கு
இதுகுறித்த புகார்களின் பேரில் ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியாஜூபின், மேலாளர் கேரளாவை சேர்ந்த விஜி மோகன்(46) மற்றும் பணியாளர்கள் மீது புகார் செய்தார்.
அதன்பேரில் அவர்கள் மீது ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு இருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சித்ரவதை செய்தல், உள் நோக்கத்தோடு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை வெளி மாநிலத்திற்கு அழைத்து செல்லுதல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆஸ்பத்திரியில் கைது
இவர்களில், மேலாளர் விஜி மோகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி குரங்கு கடித்ததால் காயம் அடைந்ததாக கூறி, ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
அதேபோல் அவரது மனைவி மரியாஜூபின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி சேர்ந்தார். இதனால் அவர்களை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், உடல்நலம் சரியானதை அடுத்து, மரியாஜூபின் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதேபோன்று, ஆசிரமத்தில் வேலைபார்த்த விழுப்புரம் அருகே அயனம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பூபாலன்(34), தெலுங்கானாவை சேர்ந்த சதீஷ்(35), கேரளா மாநிலம் பாலக்காடு தாஸ்(75) ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு, நேற்று அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஜாபருல்லா கதி என்ன?
ஜூபின்பேபி ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர், இன்னும் இரு தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டு உள்ளனர். ஜூபின்பேபி கைதுக்கு பின்னரே, ஆசிரமத்தில் இருந்து மாயமானதாக கூறப்படும் ஜாபருல்லா(45) மற்றும் அவருடன் சேர்ந்தவர்கள் நிலை குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கலெக்டர் உத்தரவு
இதற்கிடையே, ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த 142 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், பிரச்சினைக்குரிய ஆசிரமத்தை சீல் வைக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் பழனி நேற்று முன்தினம் உத்தரவிட்டு இருந்தார்.
ஓரிரு தினங்களில் ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்படும் என்று தெரிகிறது.