பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை மருந்து விற்பனை பிரதிநிதி கைது


பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை மருந்து விற்பனை பிரதிநிதி கைது
x

சென்னையில் பெண் டாக்டரின் அழகை வர்ணித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக மருந்து விற்பனை பிரதிநிதி கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனரை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

எனது தந்தை ஓய்வு பெற்ற ஐ.ஏ.ஏஸ். அதிகாரி. எனக்கு திருமணமாகி கணவரும், 13 வயது மகனும் உள்ளனர். நான் சொந்தமாக கிளினிக் வைத்துள்ளேன்.

தப்பான நோக்கத்தில்...

எனக்கு செல்போன் 'வாட்ஸ் அப்' வாயிலாக ஒருவர் என் அழகை வர்ணித்து, தவறான நோக்கத்துடன் தகவல் அனுப்பி வந்தார். நான் அவரை கண்டித்து தகவல் அனுப்பினேன். அந்த 'வாட்ஸ் அப்' இணைப்பையும் துண்டித்தேன். அதன் பிறகும் அவர் விடவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போதும் அவரை கண்டித்தேன். அவர் என்னிடம் தப்பான நோக்கத்துடன் பேசி தொல்லை கொடுக்கிறார்.

தற்போது அவரது செல்போன் அழைப்பையும் நான் எடுப்பதில்லை. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

மருந்து விற்பனை பிரதிநிதி

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க, மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் இது தொடர்பாக 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் பெண் டாக்டருக்கு செல்போனில் பேசி செக்ஸ் தொல்லை கொடுத்தவரின் பெயர் பன்னீர்செல்வம் (வயது 38). இவர் சென்னை பம்மலைச் சேர்ந்தவர். மருந்து விற்பனை பிரதிநிதியாக இருந்தார். அவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அழகில் மயங்கினேன்...

நான் பெண் டாக்டரின் அழகில் மயங்கினேன். மருந்து, மாத்திரை சப்ளை செய்வதற்காக அவரது கிளினிக்கிற்கு சென்றுள்ளேன். அவரிடம் நேரில் பேச பயந்து, செல்போனில் தகவல் அனுப்பினேன் என்று பன்னீர்செல்வம் தனது வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான பன்னீர்செல்வம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story