போதை பொருள் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
தூத்துக்குடியில் போதை பொருள் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் பொருட்டு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கொரியர் மற்றும் டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கான போதை பொருள் கடத்தல் தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், "கொரியர் மற்றும் டிராவல்ஸ் மூலம் சந்தேகத்திற்கிடமாக பார்சல்கள் ஏதேனும் வருகிறதா எனவும், அதில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தால் பார்சல் அனுப்புபவர் மற்றும் பெறுபவர்களின் விவரங்களை உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கஞ்சா புகையிலை போன்ற போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக தனியாக அறிவிக்கப்பட்டுள்ள 8300014567 மற்றும் 9514144100 ஆகிய எண்களை தொடர்புகொண்டு போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அதுபோல பொதுமக்களும் மேற்படி எண்களுக்கு தகவல் தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தை போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு தரவேண்டும்" என்றாா்.
கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அருள், ஆவுடையப்பன், சிவசுப்பு, மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, காவல் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் மற்றும் கொரியர் சர்வீஸ் மற்றும் டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர்கள், மேலாளர்கள் கலந்து கொண்டனர்.