அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை வாலிபர் கைது
அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பணிமனைக்கு சொந்தமான அரசு பஸ் ஒன்று கும்பகோணத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு ஜெயங்கொண்டம் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. தா.பழூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே இரவு 11.15 மணி அளவில் பஸ் வந்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு போதை ஆசாமி பஸ்சை தடுத்து நிறுத்தியுள்ளார். பின்னர் அவர், டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டி பஸ்சை விட்டு கீழே இறங்கி வருமாறு கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பஸ் கண்டக்டர் ராஜ்குமார் மற்றும் பஸ்சில் பயணித்த சில பயணிகள் போதை ஆசாமியை ஓரமாக செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த போதை ஆசாமி திடீரென சாலையோரத்தில் கிடந்த ஒரு கல்லை எடுத்து பஸ்சின் முன்பக்க கண்ணாடியை நோக்கி வீசி எரிந்துள்ளார். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. சத்தம் கேட்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் ஓடி வந்துள்ளனர். வந்து பார்த்தபோது போதை ஆசாமி பஸ்சின் கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மணப்பாறை சொக்கலிங்கபுரம் பகுதியில் வசித்து வரும் கணேசன் மகன் பசுபதி(26) என்பது தெரியவந்தது. இவர் தா.பழூர் காலனி தெருவில் வசித்து வரும் ஒரு பெண்ணை திருமணம் செய்து மணப்பாறையில் வசித்து வந்ததும், கடந்த ஒரு மாதமாக அவர் தனது மனைவியுடன் தா.பழூரில் வசித்து வருவதும் தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் பசுபதி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.