போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்
உடுமலை
உடுமலையில், காவல் துறையின் சார்பில்1,000க்கும் மேற்பட்டமாணவ, மாணவிகள்கள் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
மாரத்தான் போட்டி
உடுமலை உட்கோட்ட காவல் துறையின் சார்பில் கடந்த ஒரு வாரமாக பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக உடுமலையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடந்தது. இதில் ஆண்களுக்கு குட்டைத்திடலில் இருந்து தளி சாலையில் போடிபட்டி அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வரை சென்று திரும்பி வரவேண்டும். இவர்களுக்கான மொத்த தூரம் (சென்று திரும்பியது) 10 கி.மீ.ஆகும்.
பெண்களுக்கான போட்டியில் குட்டைத்திடலில் இருந்து தளிசாலையில் எலையமுத்தூர் சாலைப்பிரிவில் உள்ள தனியார் பள்ளி வரை சென்று திரும்ப வேண்டும். இவர்களுக்கான மொத்த தூரம் 5 கி.மீ. ஆகும். உடுமலை குட்டைத்திடலில் இருந்து புறப்பட்ட மாரத்தான் போட்டி புறப்படுவதற்கு முன்பு விளையாட்டு ஜோதி ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். இதைத்தொடர்ந்து ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் மாரத்தான் போட்டிகள் நடந்தது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளைச்சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.
விழிப்புணர்வு
அவர்களுக்கு, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த வாசகம் பொறிக்கப்பட்ட பனியன்கள் வழங்கப்பட்டது. அந்த பனியன்களை அவர்கள் அணிந்து, போட்டியில் பங்கேற்றனர். மாரத்தான் போட்டியை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜான்சன் தொடங்கி வைத்தார். உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் முன்னிலை வகித்தார்.
போட்டிகள் முடிவடைந்ததும் முதல் 3 இடங்களைப்பெற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன. 25 பேருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. மாரத்தான் போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உடுமலை உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், சமூக ஆர்வவர்கள், பல்வேறு சேவை சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.