காரில் கடத்திய ரூ.3 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல் சினிமா பாணியில் போலீசார் விரட்டிச்சென்று நடவடிக்கை


காரில் கடத்திய ரூ.3 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல் சினிமா பாணியில் போலீசார் விரட்டிச்சென்று நடவடிக்கை
x

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்தி சென்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்களை தனிப்படை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.

வேலூர்

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்தி சென்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்களை தனிப்படை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.

வாகன தணிக்கை

ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வேலூர் மாவட்டம் வழியாக குட்கா, பான்மசாலா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி, மாவட்ட, மாநில எல்லைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வேகமாக கார் ஒன்று வந்தது. அதனை போலீசார் மறித்து நிறுத்த முயன்றனர். ஆனால் போலீசாரை கண்டதும் கார் நிற்காமல் வேகமாக சென்றது.

காரில் போதைப்பொருட்கள் கடத்தல்

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தங்கள் வாகனத்தில் காரை விரட்டி சென்றனர். பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேலூரை நோக்கி வந்த கார் கந்தனேரி கூட்ரோட்டின் உள்ளே சென்றது. அதனை போலீசார் விடாமல் பின்தொடர்ந்தனர். அணைக்கட்டு மூலைகேட், ஊசூர், அரியூர் வழியாக கார் வேலூர் தொரப்பாடி வந்தபோது எம்.ஜி.ஆர்.சிலை அருகே காரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் காரை சோதனை செய்தனர்.

அதில், 42 மூட்டைகளில் குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருந்தன. இதையடுத்து டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அவர் உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி ஓசான்பூரை சேர்ந்த ராகுல்சுக்லா (வயது 24) என்பதும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து போதைப்பொருட்களை சென்னைக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது.

சினிமா பாணியில்...

இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். மேலும் ரூ.3 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன.

சினிமா பாணியில் போதைப்பொருட்கள் கடத்திய காரை சுமார் 20 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று பிடித்த தனிப்படை போலீசாருக்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பாராட்டு தெரிவித்தார்.


Next Story