செடி முருங்கை நாற்றுகள் வினியோகம்


செடி முருங்கை நாற்றுகள் வினியோகம்
x

செடி முருங்கை நாற்றுகள் வினியோகம்

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் செடி முருங்கை நாற்றுகள் வினியோகம் செய்யப்படுகிறது.

மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வருமானம்

மடத்துக்குளம் வட்டாரத்துக்கு 2022-23-ம் நிதியாண்டில் 12.5 ஏக்கருக்கு முருங்கை நாற்றுகள் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சங்கராமநல்லூர் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட பி.கே.எம். 1 ரக செடி முருங்கை நாற்றுகள் 2.5 ஏக்கருக்கு 1000 நாற்றுகள் 100சதவீத மானியத்தில் வழங்கப்படும். விவசாயிகள் உடனடியாக பெற்று நாற்றுக்களை நடவு செய்யலாம். செடி முருங்கை நடவு செய்த 4 அல்லது 5 மாதங்களில் காய்க்கத் தொடங்குவதால் விவசாயிகளுக்கு விரைவில் வருமானம் கிடைக்கும்.

மேலும் ஒருமுறை விதைத்தால் 3 ஆண்டுகள் வரை காய்த்து விவசாயிகளுக்கு பலன் தரும். இந்த வகை முருங்கை எல்லா வகை மண்ணிலும் வளரக்கூடியதாகும். .ஜூன்-ஜூலை மற்றும் நவம்பர்-டிசம்பர் நடவு செய்ய ஏற்ற பருவங்கள் ஆகும்.30 நாட்கள் வயதுடைய செடிகளை நடுவதற்கு பயன்படுத்தலாம்.

கவாத்து

செடிகள் ஒரு மீட்டர் உயரம் வளர்ந்தவுடன் நுனியை கிள்ளிவிட வேண்டும்.இவ்வாறு செய்வதனால் பக்கக் கிளைகள் அதிகமாக தோன்றும்.தனிப்பயிராக முருங்கை சாகுபடி செய்யும் போது ஊடுபயிராக தக்காளி, வெண்டை போன்ற குறுகிய காலப் பயிர்களை பயிர் செய்து கூடுதல் வருவாய் ஈட்டலாம்.

ஒரு வருடம் கழித்து காய்ப்பு முடிந்த பிறகு செடிகளை தரைமட்டத்திலிருந்து சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் வெட்டி விட வேண்டும்.இதனால் புதிய குருத்துகள் வளர்ந்து மீண்டும் 5 மாதங்களில் காய்க்கத் தொடங்கும்.இதுபோல ஒவ்வொரு காய்ப்புக்குப் பிறகும் செடிகளை வெட்டிவிட்டு 3 ஆண்டுகள் வரை மறுதாம்புப் பயிராக பராமரிக்கலாம்.

விதைத்த 6 மாதங்களில் காய்கள் அறுவடைக்கு வரும்.ஒரு ஆண்டில் ஒரு மரத்திலிருந்து சுமார் 220 காய்கள் வரை அறுவடை செய்யலாம்.ஒரு ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு 20 முதல் 25 டன்கள் வரை மகசூல் கிடைக்கும்.எனவே செடி முருங்கை சாகுபடி செய்து பலன் பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், உரிமைச் சான்று, ரேஷன் கார்டு, ஆதார், வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



Next Story