முருங்கைக்காய் விலைகிலோ ரூ.5-க்கு விற்பனை
உடன்குடி பகுதியில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென சரிந்து, கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உடன்குடி:
உடன்குடி பகுதியில் முருங்கைக்காய் சீசன் தொடங்கி இருப்பதால், விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் கிலோ ரூ.5-க்கு விலை குறைத்து விற்கப்படுகிறது.
முருங்கைக்காய் விலை சரிவு
உடன்குடி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் முருங்கைக்காய் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது முருங்கைகாய் சீசன் தொடங்கி உள்ளது. பெரும்பாலான இடங்களில் செடிகளில் முருங்கைக்காய் கொத்துக் கொத்தாய் காய்த்து தொங்குகின்றன.
கடந்த ஆண்டை விட முருங்கைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ எடையுள்ள முருங்கைக்காய் ரூ.5-க்கு விற்கப்படுகிறது. காய்கறி கடைகளில் அதிக அளவில் முருங்கைக்காய்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. தெருக்களிலும் குறைந்த விலைக்கு கூவி விற்கும் நிலை இருக்கிறது.
விவசாயிகள் வேதனை
கடந்த ஒருவாரத்துக்கு முன்பு இப்பகுதியில் ஒரு கிலோ முருங்கக்காய் ரூ.40 முதல் ரூ.50-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், விளைச்சல் அதிகரிப்பால் கிடுகிடுவென விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் கடும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், உடன்குடி பகுதியில் முருங்கைக்காய் விளைச்சல் தற்போது அதிகரித்துள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், போதிய விலை கிடைக்கவில்லை. இப்பகுதியில் திரும்பி பக்கமெல்லாம் முருங்கைக்காய் மரங்கள் பூவும், பிஞ்சும், காயுமாக பசுமையாக காட்சியளிக்கின்றன. தினமும் ஏராளமான காய்களை பறிக்க முடிகிறது. ஆனால் மரத்திலிருந்து முருங்கைக்காய்களை பறிக்கும் கூலிக்கு கூட விலை கட்டுபடியாகாத நிலை இருக்கிறது. இதனால் சில விவசாயிகள் முருங்கைக்காய்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டுவிடும் நிலை இருக்கிறது, என்றார்.