குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி மோட்டார் சைக்கிள் மீது மோதல்


குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி மோட்டார் சைக்கிள் மீது மோதல்
x

குடியாத்தம் அருகே குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி மோட்டார் சைக்கிள் மீது மோதியதுடன், பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

மோட்டார்சைக்கிள் மீது மோதல்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த குளிதிகை கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 42), தூய்மை பணியாளராக வேலைபார்த்து வருகிறார். இவர் தனது மனைவி வெண்மதியுடன் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் குடியாத்தம்- மாதனூர் சாலையில் உள்ளி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மாதனூரில் இருந்து குடியாத்தம் நோக்கி கார் ஒன்று வேகமாக தாறுமாறாக வந்துள்ளது.

இந்த கார் ரயில்வே மேம்பாலம் அருகே லட்சுமணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன், மனைவி இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதனை கண்ட அவ்வழியாக சென்ற பொதுமக்கள், அவர்கள் இருவரையும் மீட்டனர். அப்போது காரை தாறுமாறாக ஓட்டி வந்த நபர் குடிபோதையில் இருந்து உள்ளார். அவர் பொதுமக்களை பட்டா கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.

டிரைவர் கைது

உடனடியாக பொதுமக்கள் இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று கத்தியை காட்டி மிரட்டிய நபரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் மாதனூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் மோகன்குமார் (27) என்பது தெரியவந்தது. இவர் மீது ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளதும், குடிபோதையில் காரை ஓட்டி வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது மோதி, கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டியதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து மோகன்குமாரை கைது செய்து, அவர் ஓட்டி வந்த கார் மற்றும் பட்டாகத்தியை பறிமுதல் செய்தனர்.


Next Story