ஓடைக்குள் தவறி விழுந்த தொழிலாளி சாவு
தக்கலை அருகே மதுபோதையில் ஓடைக்குள் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தக்கலை:
தக்கலை அருகே மதுபோதையில் ஓடைக்குள் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தக்கலை அருகே உள்ள குமாரபுரம் படப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது45), தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பிரேமலதா (40) என்ற மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். சுரேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கணவனை விட்டு பிரிந்த பிரேமலதா பிள்ளைகளோடு தனியாக வசித்து வருகிறார். இதனால் சுரேஷ் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். மேலும், சுரேஷ் மது குடித்து விட்டு அருகில் வசித்து வரும் தனது பெற்றோரான தாமோதரன், ஓமனா ஆகியோரிடமும் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சுரேஷ் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று காலையில் வீட்டின் பின்புறம் உள்ள ஓடையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி கொற்றிக்கோடு போலீசுக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மதுபோதையில் இருந்த சுரேஷ் வீட்டின் பின்புறம் சென்றபோது அங்குள்ள ஓடையில் தவறி விழுந்துள்ளார். இதில் முகத்தில் காயம் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. மேலும், இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.