புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடிபோதையில் சாவு: வாலிபர் மூச்சு குழலில் உணவு அடைத்து பலியான பரிதாபம் -பிரேதபரிசோதனையில் அதிர்ச்சி தகவல்
புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடிபோதையில் இறந்த வாலிபரின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் மூச்சு குழலில் உணவு அடைத்து பலியானதாக தெரிவித்துள்ளனர்.
ஏற்காடு:
புத்தாண்டு கொண்டாட்டம்
சேலம் மாவட்டம் மல்லூர் வேங்கம்பட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மகன் சந்தோஷ் (வயது 23). இவர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக நேற்று முன்தினம் மதியம் 3 மணி அளவில் தனது நண்பர்கள் 9 பேருடன் ஏற்காடு வந்துள்ளார்.
பின்னர் அவர்கள் ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். நள்ளிரவில் சந்தோஷ் உள்பட அனைவரும் மது அருந்தியும் கேக் வெட்டியும் புத்தாண்டை கொண்டாடி உள்ளனர்.
அப்போது சந்தோஷிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை நண்பர்கள் ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சந்தோஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஏற்காடு போலீசார் சந்தோஷின் மரணம் குறித்து விசாரித்தனர். அவர் நேற்று தான் முதல்முறையாக மது அருந்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனையில் தகவல்
அவர் முதன் முதலாக மது அருந்திய காரணத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. அதன் பின்னரே சந்தோஷின் உடலை கைப்பற்றிய போலீசார் அவரது உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து சந்தோஷின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரது மூச்சு குழலில் உணவு அடைத்துள்ள காரணத்தால் மூச்சு விட முடியாமல் மூச்சு திணறல் ஏற்பட்டதால் தான் இறந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் இறந்து போன சந்தோஷிற்கு மனைவியும், 3 வயதில் ஒரு குழந்தை உள்ளனர்.