தண்ணீர் இல்லாமல் வறண்ட ஊருணிகள்
மண்டபம் யூனியனில் பல கிராமங்களில் தண்ணீர் இல்லாமல் ஊருணிகள் வறண்டன. பருவமழை பெய்து ஊருணிகள் நிரம்புமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்
பனைக்குளம்,
பருவமழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்மாய்களும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊருணிகளும் உள்ளன. மண்டபம் யூனியனுக்குட்பட்ட நொச்சியூரணி, மானாங்குடி, புதுமடம், தாமரைக்குளம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் ஏராளமான ஊருணிகள் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் பருவமழை சீசனில் பெய்யும் மழை நீரால்தான் இந்த கிராமங்களில் உள்ள அனைத்து ஊருணிகளும் நிரம்புகின்றன.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் போதிய அளவு மழையே பெய்யாததால் மண்டபம் யூனியனுக்குட்பட்ட நொச்சியூரணி, மானாங்குடி, தாமரைகுளம் உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள ஊருணிகளிலும் தண்ணீர் மிக குறைந்த அளவிலே காணப்பட்டது.
வறண்ட ஊருணிகள்
இந்நிலையில் தற்போது தாமரைகுளம், நொச்சியூரணி, மானாங்குடி உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள ஊருணிகளில் ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் பரிதாபமாக காட்சியளித்து வருகின்றன. வறட்சி காரணமாக ஊருணியில் மண்ணில் வெடிப்பு ஏற்பட்டு பாளம்பாளமாக காட்சியளிக்கிறது.
இந்த ஆண்டு பருவமழை சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்த ஆண்டாவது பருவமழை கைகொடுக்குமா? பருவமழை சீசனில் அதிக மழை பெய்து மாவட்டத்தில் உள்ள ஊருணிகள் நிரம்புமா? என்ற எதிர்பார்ப்பில் கிராமமக்களும், விவசாயிகளும் உள்ளனர்.