தெளித்த விதையுடன் காய்ந்து கிடக்கும் விளைநிலங்கள்


தெளித்த விதையுடன் காய்ந்து கிடக்கும் விளைநிலங்கள்
x
தினத்தந்தி 26 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை கடைமடைக்கு போதுமான அளவு காவிரி நீர் வராததால் தெளித்த விதையுடன் விளைநிலங்கள் காய்ந்து கிடக்கின்றன. பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்


நாகை கடைமடைக்கு போதுமான அளவு காவிரி நீர் வராததால் தெளித்த விதையுடன் விளைநிலங்கள் காய்ந்து கிடக்கின்றன. பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முப்போகம் நெல் சாகுபடி

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ெடல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கடந்த 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

நாகை கடைமடை விவசாயிகள் நேரடி விதைப்பாக குறுவை விதையை வயலில் தெளித்து தண்ணீருக்காக காத்திருந்தனர்.

ஆனால் தற்போது வரை கடைமடை பகுதி விவசாயத்துக்கு போதுமான அளவு காவிரி நீர் வரவில்லை. இதனால் விதை தெளித்த வயல்கள் தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகசூல் பாதிக்கப்படும்

இதுகுறித்து நாகை கடைமடை விவசாயிகள் கூறும்போது:-

மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டது. இந்த தண்ணீரானது நாகை கடைமடை பகுதிக்கு அதிகபட்சம் 10 நாட்களுக்குள் வந்து சேரும். ஆனால் தற்போது வரை நாகை மாவட்ட கடைமடை பகுதியான ஒரத்தூர், பாலையூர், செல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு காவிாி நீா் விவசாயத்துக்கு போதுமானதாக வந்து சேரவில்லை. இதனால் கிளை வாய்க்கால்கள், சட்ரஸ்கள் காய்ந்து கிடக்கிறது.

குறுவை சாகுபடிக்காக வயலில் விதை தெளித்து 10 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் விதைகளை காக்கா, குருவிகள் கொத்தி செல்லும் அவல நிலை ஏற்படும். மேலும் விதைகளின் முளைப்புத் திறன் குறையும். மகசூல் பாதிப்பு ஏற்படும். காலம் தாழ்த்தி தண்ணீர் வந்தால், பயிர்கள் தாமதமாக வளரும். இதனால் வடகிழக்கு பருவமழையில் பெரும் பயிர் சேதத்தை சந்திக்க வேண்டி இருக்கும்.

கூடுதல் தண்ணீா் திறக்க வேண்டும்

மேட்டூர் அணையில் இருந்து 15,000 கன அடிக்கு அதிகமாக தண்ணீர் திறக்க வேண்டும். முறை வைக்காமல் தண்ணீர் விட வேண்டும். அப்போதுதான், கடைமடை பகுதியான நாகைக்கு சாகுபடிக்கு தேவையான தண்ணீர் முழுவதுமாக வந்து சேரும்.

தற்போது வெட்டாறில் இருந்து பிரியும் தேவநதி பாசன வாய்க்கால்கள் நீரின்றி காய்ந்து கிடைக்கின்றன. எனவே பல ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.


Next Story