தண்ணீரின்றி காய்ந்த நெற்பயிரை கால்நடைகளுக்கு தீவனமாக்கும் விவசாயிகள்
திருஉத்தரகோசமங்கை அருகே காய்ந்த நெற்பயிர்களை கால்நடைகளுக்கு தீவனமாக விவசாயிகள் பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.
திருஉத்தரகோசமங்கை,
திருஉத்தரகோசமங்கை அருகே காய்ந்த நெற்பயிர்களை கால்நடைகளுக்கு தீவனமாக விவசாயிகள் பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை
ராமநாதபுரம் மாவட்டம் வறண்ட மாவட்டம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை விட ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயம் என்பது மிக மிக குறைவு என்றே சொல்லலாம். ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்தே மாவட்டத்தில் விவசாயிகள் நெல் விவசாய பணிகளை தொடங்குகின்றனர்.
இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலும் நெல் விதைத்து பணிகளை விவசாயிகள் தொடங்கினர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி இரண்டரை மாதங்கள் முடிந்த பின்னரும் மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனிடையே திருஉத்தரகோசமங்கை அருகே மேலசீத்தை, கீழசீத்தை, களரி, ஆனைகுடி, கொத்தங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் வாடி வருகின்றன. இதனால் காய்ந்துபோன நெற்பயிர்களை வைகோலாக மாடுகளுக்கு உணவுக்காக பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில் நெற்பயிர்களை கூலி ஆட்களை வைத்து அறுவடை செய்யும் பணியும் நடைபெற்று வருகின்றது.
நிவாரணம்
இதுகுறித்து களரி கிராமத்தில் வைக்கோல் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்த மரகதம் என்ற பெண் விவசாயி கூறும்போது, இந்த ஆண்டு பருவமழை அதிகளவு பெய்யவில்லை. இதனால் களரி, மேலமடை, கொம்பூதி, கொத்தங்குளம், சுமைதாங்கி, வெண்குளம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் பல ஏக்கர் பரப்பளவு நெற் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்துவிட்டன. காய்ந்துபோன நெற்பயிர்களை கால்நடைகளுக்காவது வைக்கோலாக பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில் நெற்பயிர்களை அறுவடை செய்து வருகிறோம். ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்தும் இந்த ஆண்டு தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் விளைச்சல் இல்லாமல் போனது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும்தான். வேளாண்மை துறை அதிகாரிகள் நெற்பயிர்களை கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.