வறண்டு கிடக்கும் கருமேனி ஆறு


வறண்டு கிடக்கும் கருமேனி ஆறு
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி அருகே தண்ணீரின்றி கருமேனி ஆறு வறண்டு கிடப்பதால் பொதுமக்கள், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி அருகே தண்ணீர் வரத்து இல்லாமலும், போதிய மழைபெய்யாததாலும் கருமேனி ஆறு வறண்டு கிடக்கிறது. இதனால் இப்பகுதி விவசாயம் அடியோடுபாதிக்கும் அபாயம் உள்ளதால், தாமிரபரணி தண்ணீரை திறந்து விடவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருமேனி ஆறு

உடன்குடி, சாத்தான்குளம் வட்டார பகுதி வழியாக மணி நகர், பிச்சிவிளை. உதிரமாடன்குடியிருப்பு, தாண்டவன்காடு, மாதவன்குறிச்சி, சிறு நாடார் குடியிருப்பு வழியாக ஓடி மணப்பாடு கருமேனிஆறு கலக்கிறது. இந்த ஆற்றில் பல இடங்களில் தடுப்பு அணைகள்கட்டி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. உடன்குடி வட்டார பகுதியில் உள்ள 15 குளங்கள் முழுமையாக நிறைந்து வெளியேறும் தண்ணீர் இந்தஆற்றில் விழுந்து தான் கடலுக்கு உபரியாக செல்லும். தற்போது உடன்குடி வட்டார பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர்வரவில்லை.

விவசாயம் பாதிப்பு

இதனால் சடையநேரி கால்வாய் புத்தன்தருவை கால்வாய் உட்பட அனைத்து கால்வாய்களும் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. உடன்குடி சாத்தான்குளம் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாராமாக இருக்கும் இந்த ஆறு வறண்டு கிடப்பதால் இப்பகுதி விவசாயப்பணி முடங்கும் அபாயம் நிலவுகிறது. இந்த ஆற்றில் தண்ணீர் ஓடினால் தான் விவசாய நிலங்களின் நீர்மட்டத்தில் கடல் நீர் புகுந்து விடாமல் தடுக்கப்படும்.

தண்ணீர் திறக்க கோரிக்கை

இந்த ஆண்டு தாமிரபரணி ஆற்று தண்ணீர் வராததால் கருமேனி ஆறு மற்றும் சுற்றுவட்டார குளங்கள் வறண்டு கிடப்பதால் விவசாயிகள், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே, இந்த ஆற்றில் தாமிரபரணி தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story