ஓடையை அடைத்ததால் நீர்வரத்து இல்லாத தெப்பன்குளம் கண்மாய்


ஓடையை அடைத்ததால் நீர்வரத்து இல்லாத தெப்பன்குளம் கண்மாய்
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிறுமலையாறு நீர்த்தேக்கம் நிரம்பி வழிந்தபோதிலும், ஓடையை அடைத்ததால் தெப்பன்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வராதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல்

தெப்பன்குளம் கண்மாய்

கொடைரோடு அருகே முருகத்தூரான்பட்டியில் 30 ஏக்கர் பரப்பளவில் தெப்பன்குளம் கண்மாய் உள்ளது. இதன் மூலம் சுமார் 350-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கொடைரோடு அருகே உள்ள சிறுமலையாறு நீர்த்தேக்கம் நிரம்பி, அதன் மறுகால் வழியாக வரும் தண்ணீர் செட்டியபட்டிகுளம், பொட்டிசெட்டிபட்டி அரண்மனைகுளம் வழியாக தெப்பன்குளத்துக்கு வந்தடைகிறது. ஆனால் போதிய மழை பெய்யாததால், கடந்த சில ஆண்டுகளாக தெப்பன்குளம் நிரம்பவில்லை.

நிரம்பி வழியும் நீர்த்தேக்கம்

இந்தநிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால், தற்போது சிறுமலையாறு நீர்த்தேக்கம் நிரம்பி மறுகால் பாய்கிறது. ஆனால் தெப்பன்குளத்துக்கு தண்ணீர் வரவில்லை.

ஏனெனில் தண்ணீர் வரும் ஓடையை சிலர் அடைத்து, அன்னசமுத்திர கண்மாய்க்கு தண்ணீர் திருப்பி விட்டதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

விவசாயிகள் வேதனை

தெப்பன்குளத்தில் தண்ணீர் நிரம்பினால் தான் முருகத்தூரான்பட்டி, சிங்கம்பட்டி, கட்டக்கூத்தன்பட்டி, கல்லுப்பட்டி ஆகிய கிராம விவசாயிகள் பயன் அடைவார்கள். இதேபோல் குல்லக்குண்டு, பொட்டி செட்டிபட்டி, மாலையகவுண்டன்பட்டி பகுதியில் நிலத்தடிநீர் மேம்படும்.

ஓடையை அடைத்து தண்ணீர் திருப்பி விட்டதால் இனிவருங்காலத்தில் மழை எவ்வளவு தான் பெய்தாலும் தெப்பன்குளத்துக்கு தண்ணீர் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தற்போது தெப்பன்குளத்தில் உள்ள பள்ளங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறியாகி விட்டது.

எனவே ஓடையை அடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மீண்டும் தெப்பன்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறையினர் முன்வர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story