தொடர் மழையால் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம்
தொடர் மழையால் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம்
கும்பகோணம் பகுதியில் பெய்த தொடர் மழையால் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அழுகும் பயிர்கள்
கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. ஒரு சில இடங்களில் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். நகரின் ஒரு சில இடங்களில் கழிவு நீர் கால்வாய்கள் பாதாள சாக்கடை குழாய்களில் மழை நீர் நிரம்பி சாலையில் கழிவு நீர் வழிந்து ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த தொடர் மழையால் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் பயிர்கள் அழுகி வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உரிய இழப்பீடு
மழைநீரை வடிய வைக்க போதிய வடிகால் வசதி இல்லாமல் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர்வாரி வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.