நம்பியூரில் கடன் தொல்லையால் தூக்குப்போட்டு ஆடிட்டர் தற்கொலை
நம்பியூர் அருகே கடன் தொல்லையால் தூக்குப்போட்டு ஆடிட்டர் தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் எழுதிய உருக்கமான கடிதமும் போலீசில் சிக்கியது.
நம்பியூர்
நம்பியூர் அருகே கடன் தொல்லையால் தூக்குப்போட்டு ஆடிட்டர் தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் எழுதிய உருக்கமான கடிதமும் போலீசில் சிக்கியது.
ஆடிட்டர்
கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 42). இவருடைய மனைவி சுசித்ரா.
வினோத்குமார் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருேக உள்ள புதுசூரிபாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலையில் ஆடிட்டராக பணியாற்றி வந்தார். இதற்காக அவர் நம்பியூர் காந்திபுரம் வடக்கு வீதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
சாவு
இந்த நிலையில் வினோத்குமார் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்து உள்ளது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வினோத்குமாரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்து உள்ளனர்.
அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் சேலையால் தூக்குப்போட்டு வினோத்குமார் தற்ெகாலை செய்து கொண்டதை கண்டனர். மேலும் அவருடைய உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
கடன் தொல்லை
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், 'கடந்த சில நாட்களுக்கு முன்பு நம்பியூரில் இருந்து கோவை பெரியநாயக்கன்பாளையத்துக்கு வினோத்குமார் தனது மனைவியுடன் சென்று உள்ளார். பின்னர் கடந்த 19-ந் தேதி வேலை விஷயமாக மதுரை செல்ல வேண்டி உள்ளது என மனைவியிடம் கூறிவிட்டு பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.
ஆனால் அவர் மதுரை செல்லாமல் நம்பியூரில் உள்ள வீட்டுக்கு வந்து உள்ளார். ஏற்கனவே அவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டது,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வினோத்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் கைப்பட எழுதியதாக ஒரு கடிதத்தையும் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், 'என்னுடன் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களிடம் கடன் வாங்கி உள்ளேன். என்னை நம்பி கடன் கொடுத்த அவர்களின் பணத்தை உரிய காலத்தில் செலுத்த முடியவில்லை. அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி என்னை மன்னித்து விடுங்கள். சுஜியை (மனைவியை) எதுவும் சொல்லாதீர்கள். என்னுடைய கடனை எப்படியாவது அடைத்து விடலாம் என 3 மாதங்களாக போராடினேன். ஆனால் மேற்கொண்டு அதிக அளவில் கடனாளியாகிவிட்டேன். எனவே இனிமேல் என்னால் வாழ முடியாது. என் சாவுக்கு நானே காரணம்,' என உருக்கமாக குறிப்பிடப்பட்டு உள்ளது.