வெவ்வேறு பிரச்சினை காரணமாக இருதரப்பினர் தீக்குளிக்க முயற்சி


வெவ்வேறு பிரச்சினை காரணமாக இருதரப்பினர் தீக்குளிக்க முயற்சி
x

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வெவ்வேறு பிரச்சினை காரணமாக இருதரப்பினர் டீசல், மண்எண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வெவ்வேறு பிரச்சினை காரணமாக இருதரப்பினர் டீசல், மண்எண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர்.

திருவண்ணாமலை அருகில் உள்ள துள்ளுக்குட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 67). இவர் நேற்று அவரது மகன் வெங்கடேசன், மகள் சித்ரா ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

திடீரென அவர்கள் மறைத்து கொண்டு வந்திருந்த டீசலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது வெங்கடேசன் தீப்பெட்டியை எடுத்து கொளுத்தி கொள்ள முயன்றார்.

உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் ஓடி சென்று தீப்பெட்டியை பறித்து கொண்டு அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினார்.

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வெங்கடேசன் கூறியதாவது:-

ரூ.10 ஆயிரம் லஞ்சம்

எங்களுக்கு சொந்தமாக 78 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தினை உறவினர்கள் அபகரிக்க முயற்சி செய்கின்றனர். சமீபத்தில் அந்த நிலத்தில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டு இருந்தது.

இந்த மரவள்ளி கிழக்கு செடிகளை அவர்கள் அடியாட்களுடன் வந்து அழித்ததோடு மட்டுமின்றி தாய் முனியம்மாளையும் தாக்கிவிட்டு சென்று உள்ளனர்.

இதுகுறித்து தண்டராம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தால் விசாரணை நடத்த ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்கின்றனர்.

அதனால் எங்கள் நிலத்தை மீட்டுத் தரக்கோரியும், எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட கோரியும் தீக்குளிக்க முயன்றதாக கூறினார்.

இதையடுத்து அவர்களை போலீசார் விசாரணைக்காக திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

பட்டா பெயர் மாற்றம்

அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் வடஆண்டாப்பட்டு பகுதியை சேர்ந்த சேகர், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மொபட்டில் மறைத்து கலெக்டர் அலுவலகத்திற்குள் கொண்டு வந்த மண்எண்ணெய் கேனை எடுத்து திடீரென தீக்குளிக்க முயன்றனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கையில் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து கொண்டனர்.

அப்போது சேகரின் மனைவி தரையில் படுத்து உருண்டு கதறி அழுதார். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது சேகர் கூறுகையில், வடஆண்டாப்பட்டு பகுதியில் நான் மற்றும் எனது 2 சகோதரர்கள் பெயர்களில் உள்ள இடத்தின் பட்டாவை ரத்து செய்து எந்தவித உரிமையும் இல்லாத நபர் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதை ரத்து செய்து எங்கள் பெயரில் பட்டாவை மாற்றி தர வேண்டும் என்றார். இதையடுத்து அவர்களை போலீசார் மேல் விசாரணைக்காக திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் வெவ்வேறு தரப்பினர் திடீரென டீசல் மற்றும் மண்எண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story