ஏரல் தாலுகாவில் பருவமழை பொய்த்ததால்200 ஏக்கர் நெற்பயிர்கள் கருகி சேதம்
ஏரல் தாலுகாவில் பருவமழை பொய்த்ததால் 200 ஏக்கர் நெற்பயிர்கள் கருகி சேதம் அடைந்ததன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏரல் தாலுகாவில் பருவமழை பொய்த்ததால் 200 ஏக்கர் நெற்பயிர்கள் கருகி சேதம் அடைந்து உள்ளன என்று விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கருகிய பயிர்கள்
ஏரல் தாலுகா குறிப்பன்குளத்தை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து நேற்று கோரிக்கை கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் குறிப்பன்குளம் கிராமத்தில் குடியிருந்து வருகிறோம். அந்த பகுதியில் விவசாயமும் செய்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் ஆண்டுதோறும் நெல் சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் உள்ள சுண்டபாறைகுளம், செட்டியப்பன்குளம், பிள்ளையார்குளம், வாகைகுளம் ஆகிய குளங்களில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி சுமார் 200 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்து இருந்தோம். நடப்பு ஆண்டில் பருவமழை பெய்யாமல் பொய்த்து போனதால் நெற்பயிர்கள் கருகிய நிலையில் உள்ளது. இந்த ஆண்டு எங்கள் கிராமத்துக்கு பயிர் காப்பீடு திட்டத்திலும் சேர்க்கப்படவில்லை. ஆகையால் எங்கள் கிராமத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
பாதுகாப்பு
ஆறுமுகநேரியை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் பாலகுமரேசன் என்பவர் தலைமையில், அவரது நிறுவனம் மூலம் பள்ளிக்கூடங்களில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர் கலெக்டர் செந்தில்ராஜிடம் கொடுத்த மனுவில், அரசு பள்ளிகளை தத்தெடுத்து, அதில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு போதிய கல்வி செலவினங்களை ஏற்று உதவி செய்து வருகிறேன். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு எங்கள் பகுதியில் மாணவர்களை பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்கிறார்கள் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நான் தான் மக்களை திரட்டி போராட்டம் நடத்தி உள்ளேன் என்று நினைத்து கஞ்சா விற்பனை செய்பவர்கள் என்னிடம் தகராறு செய்து வந்தனர். இந்த நிலையில் சிறுவர்கள் என்னை தாக்கினர். எனக்கு பாதுகாப்பற்ற நிலைஉள்ளது. ஆகையால் எனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் எனக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும்' என்று கூறி உள்ளார்.