எட்டயபுரம் அருகே பருவமழை பொய்த்ததால்950 எக்டேர் பரப்பில் பயிர்கள் கருகின
எட்டயபுரம் அருகே பருவமழை பொய்த்ததால் 950 எக்டேர் பரப்பில் பயிர்கள் கருகின. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எட்டயபுரம் அருகே உள்ள பேரிலோவன்பட்டி கிராமத்தில் பருவமழை பொய்த்ததால், 950 எக்டேர் பரப்பில் பயிர்கள் கருகி விளைச்சல் பாதிக்கப்பட்டதால், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கருகிய பயிர்களுடன்...
எட்டயபுரம் தாலுகா பேரிலோவன்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் காய்ந்த பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலவலகத்தில் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் 950 எக்டேர் பரப்பில் மானாவாரி விவசாயம் செய்து உள்ளோம். நடப்பு ஆண்டில் எங்கள் பஞ்சாயத்துக்கு உடபட்ட அனைத்து விவசாய நிலங்களிலும் வடகிழக்கு பருவமழை இல்லாததால், பயிர்கள் விளைச்சல் இன்றி சேதம் அடைந்து விட்டன. ஆடு, மாடுகளுக்கு குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை. ஆகையால் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து வறட்சிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு செய்து உள்ளோம். ஆகையால் அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
போலி நகை
தூத்துக்குடி தங்க நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்கம் தலைவர் பாலமுருகன், செயலாளர் அந்தோணிசாமி மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், எங்கள் சங்கத்தின் கீழ் மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட அடகுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் எங்கள் சங்கத்தை சேர்ந்தவர்களின் அடகு கடைகளில் சிலர் தங்க வளையல்களை அடகு வைத்து பணம் பெற்று உள்ளனர். அதனை மீண்டும் பரிசோதித்து பார்த்த போது, அந்த நகைகள் போலி என்பது கண்டறியப்பட்டது. இதனால் அடகு வைத்தவர்களை மீண்டும் தொடர்பு கொண்ட போது, அவர்கள் விரைந்து வந்து பணத்தை செலுத்திவிட்டு வளையல்களை பெற்று சென்றனர். இந்த நகைகளின் தரத்தை காட்டும் எந்திரத்தில் வைத்து பார்த்தாலும் உண்மையான நகைகள் போன்று காண்பிக்கும் அளவுக்கு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. அரசு முத்திரையையும் போலியாக தயாரித்து பொதுமக்களையும், அடகு கடைகளையும் ஏமாற்றி வருகின்றனர். இது போன்று மோசடியாக போலி நகையை அடகு வைக்கும் கும்பல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பெரிய அளவில் மோசடி நடக்காமல் தடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறி உள்ளனர்.