வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி
வரத்து அதிகரிப்பால் நொய்யல் பகுதியில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
பூ ஏல மார்க்கெட்
கரூர் மாவட்டம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நடையனூர், மூலிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் குண்டு மல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை பயிர் செய்துள்ளனர். இங்குவிளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். ஏலம் எடுத்த உதிரி பூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்து வருகின்றனர். சில வியாபாரிகள் உதிரிப்பூக்களை பிளாஸ்டிக் கவரில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
விலை வீழ்ச்சி
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.800-க்கும், முல்லை ரூ.800-க்கும், ஜாதிமல்லி ரூ.800-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், அரளி ரூ.180-க்கும், ரோஜா ரூ.230-க்கும், செவ்வந்திப்பூ ரூ.250-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும் விற்பனையானது.
நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.240-க்கும், முல்லைப் பூ ரூ.240-க்கும், ஜாதி மல்லி ரூ.240-க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், அரளி ரூ.80-க்கும், ரோஜா ரூ.100-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும், கனகாம்பரம் ரூ.250-க்கும் விற்பனையானது. வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.