நீர் வரத்து அதிகரிப்பால் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
நீர்வரத்து அதிகரிப்பால் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நீர்வரத்து அதிகரிப்பால் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
காவிரியில் வெள்ளம்
கர்நாடகாவில் மழை காரணமாக காவிரியில் தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. எனவே காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரித்து இருப்பதுடன், நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரிக்கு திறக்கப்பட்டு உள்ள தண்ணீருடன், பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு திறக்கப்பட்டு உள்ள தண்ணீரும் (வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி) காவிரியில் கலக்கிறது. அதுமட்டுமின்றி கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் கொட்டிய தண்ணீரும் சேர்த்து கருங்கல்பாளையம் பகுதியில் வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக பாய்ந்து செல்கிறது. இதனால் காவிரிக்கரையில் தண்ணீரின் மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் லக்காபுரம் அருகே உள்ள பரிசல் துறை விநாயகர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
கோரிக்கை
கருங்கல்பாளையத்தில் முனியப்பன் நகருக்கு செல்லும் சாலையில் பள்ளமான இடத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் ஓடுகிறது. இன்னும் நீர் மட்டம் உயர்ந்ததால், சாலை துண்டிக்கப்பட்டு அந்த பகுதி மக்கள் தனித்தீவாக மாறும் நிலை ஏற்படும். இதுபோல் இங்கு ஏற்கனவே வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் மக்கள் இன்னும் வசித்து வருகிறார்கள். இதில் சில குடும்பத்தினருக்கு முனியப்பன்நகர் பகுதியில் வீட்டு மனை உள்ளது. ஆனால் வீடு கட்டுவதற்கு உரிய பொருளாதார வசதி இல்லாததால் ஆபத்தான பகுதியில் தொடர்ந்து குடியிருந்து வருவதாக தெரிகிறது. எனவே அவர்களுக்கு இலவச வீடுகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கவும், வீட்டு மனை இல்லாதவர்களுக்கு மாற்று இடம் வழங்கவும் செய்தால், காவிரியில் நீர் வரத்து அதிகரித்தாலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுத்தும் அபாய நிலை இருக்காது என்று அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் செல்வன், முருகன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். இதுபோல் முனியப்பன்நகர் சாலையை விரிவாக்கம் செய்து உயர்மட்ட சாலையாக மாற்றவோ, மாற்று சாலை அமைக்கவோ வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
நேற்று காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து ஈரோடு தாசில்தார் பாலசுப்பரமணியம், வருவாய் ஆய்வாளர் விஜயகுமார், வைராபாளையம் கிராம நிர்வாக அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் காவிரிக்கரைக்கு சென்று ஆய்வு நடத்தினார்கள். வருவாய்த்துறை சார்பில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் அக்பர் காவிரிக்கரையில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு தண்ணீர் மட்டம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.