வெயிலின் தாக்கம் அதிகரிப்பால்செண்டு பூக்கள் உற்பத்தி குறைவு
கடமலை-மயிலை ஒன்றியத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் செண்டு பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளது.
கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கடமலைக்குண்டு, குமணண்தொழு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செண்டு பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிணற்று பாசனம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் கடந்த 2 மாதமாக மழை பெய்யவில்லை. மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் செண்டு பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது.
இதன் காரணமாக விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் செண்டு பூக்கள் சாகுபடி செய்துள்ளோம். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்தது. இதன் காரணமாக பூக்கள் அமோக விளைச்சல் அடைந்தது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு, வெயிலின் தாக்கம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்துள்ளது என்றனர்.