போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் மரத்தடியில் கல்வி கற்கும் மாணவர்கள் கோ.ஆதனூர் அரசு பள்ளியின் நிலை மாறுமா?


போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால்  மரத்தடியில் கல்வி கற்கும் மாணவர்கள்  கோ.ஆதனூர் அரசு பள்ளியின் நிலை மாறுமா?
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் மாணவா்கள் மரத்தடியில் அமா்ந்து கல்வி கற்கும் நிலை மாறுமா? என எதிா்பாா்த்துள்ளனா்.

கடலூர்

விருத்தாசலம் அருகே உள்ள கோ.ஆதனூரில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி வளாகத்தில் தான் கம்மாபுரம் ஒன்றிய வட்டார வள மையமும் செயல்படுகிறது. இந்த பள்ளிக்கூடம் அரசு பள்ளிக்கூடத்திற்கான அனைத்து அடையாளங்களுடன் காணப்படுகிறது.

ஆம், பள்ளிக்குள் நுழைந்ததுமே சிமெண்டிலான கூரை கொட்டகைகளும், ஆங்காங்கே மரத்தடியில் அமர்ந்து பயிலும் மாணவர்களும் தான் முதலில் பார்வையில் படுகின்றனர்.

இரண்டு வகுப்பறைகள்

இந்த பள்ளியில் கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கோ.ஆதனூர், கோபாலபுரம், வி.குமாரமங்கலம், சொட்டவனம், கார்குடல், கோ.மாவிடந்தல், பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து வரும் 451 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 19 ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத இரண்டு பணியாளர்களும் பணிபுரிகின்றனர். 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை செயல்படும் இந்த பள்ளிக்கூடத்தில் இரண்டு வகுப்பறைகள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன.

மரத்தடியில் பயிலும் மாணவர்கள்

அதில் சிமெண்டிலான கூரை கொட்டகைகள் திறந்த வெளியாக அமைக்கப்பட்டுள்ளன. தகரக் கொட்டகைகள், கூரை கொட்டகைகள், ஓடு கட்டிடங்கள் எதுவும் பள்ளிக்கூடத்தில் இருக்கக்கூடாது என்றும், அனைத்தும் கான்கிரீட் கட்டிடங்களாக இருக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அரசின் விதிமுறைகள், இந்த பள்ளிக்கூடத்திற்கு மட்டும் விதிவிலக்கு போல் செயல்படுகிறது.

இந்த பள்ளிக்கூடத்திற்கு கூடுதலாக வகுப்பறைகளை கட்டித்தர வேண்டும் என மாணவர்கள் தங்களது பெற்றோருடன் போராட்டம் நடத்திய பிறகும் கூட அரசும், அரசு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் இந்த பள்ளிக்கூடத்தை கண்டும் காணாமலும் செல்கின்றனர்.

மரத்தடி நிழல்

போதிய கட்டிட வசதியின்றி மழைக்காலத்தில் மாணவர்கள் மழையில் நனைவதால் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அவ்வப்போது விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் பிற நாட்களில் வகுப்பறைகளில் மாணவர்கள் அமர்வதற்கு இடம் இல்லாததால் மரத்தடி நிழலில் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.

இதுதவிர பள்ளிக்கூடத்தின் ஒரு பக்கம் சுற்றுச்சுவரே இல்லாத நிலையில், மற்றொரு பக்கம் திறந்த வெளியாக கிடக்கிறது. இதனால் விடுமுறை நாட்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக பள்ளிக்கூடம் மாறிவிடுகிறது. விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு திரும்பும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் முகத்தை சுளிக்க செய்யும் வகையில் ஆங்காங்கே மதுபாட்டில்கள் உடைந்து சிதறி கிடப்பதுடன், சிகரெட் துண்டுகளும் பள்ளி வளாகம் முழுவதும் கிடக்கின்றன.

பெயரளவுக்கு விசாாிக்கும் போலீசாா்

இதனை பார்க்கும் மாணவர்கள், திசை மாறி விடுவார்களோ என பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர். பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் பைப்புகளையும் மர்மநபர்கள் அடிக்கடி சேதப்படுத்திவிட்டு செல்கின்றனா். இதுவரை 6 முறை உடைக்கப்பட்டுள்ளது. இதற்காக மட்டுமே அதிக செலவு ஏற்படுவதாக ஆசிரியர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் பெயரளவுக்கு விசாாிக்கும் போலீசாா், இளைஞர்களின் வாழ்க்கை கெட்டுவிடும் என்ற எண்ணத்தில் அவர்களை எச்சரித்து மட்டும் விட்டுச் செல்கின்றனர். இதனால் மீண்டும் மீண்டும் இந்த பள்ளியில் இதுபோன்ற அவலநிலை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

தரம் உயா்வு

இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தியாகராஜன் கூறியதாவது:- பள்ளிக்கூடத்திற்கு பெற்றோர்களாகிய நாங்கள் அனைத்து வகையிலும் உதவி கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அரசும் செவி சாய்த்தால் தான் பள்ளி முழுமையாக முன்னேறும். பள்ளிக்கூடத்திற்கு தேவையான கட்டிடங்களை உடனடியாக கட்டித்தர வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் நல்ல மனநிலையில் கல்வி பயின்று அதிக தேர்ச்சி சதவீதத்தை வழங்க முடியும். மேலும் பள்ளிக்கு தேவையான வசதிகளை நிறைவேற்றி தருவதுடன், இந்த பள்ளிக்கூடத்தை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தர வேண்டும் என்றார்.

மாணவா் சோ்க்கை குறைவு

மாணவரின் தாய் புனிதவதி கூறுகையில், பள்ளிக்கூடத்தில் சுற்றுச்சுவர் வசதி இல்லாததால் வருடந்தோறும் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு காரணம் பாதுகாப்பு வசதி இல்லாதது தான். அந்நிய நபர்கள் பள்ளிக்கூட வளாகத்திற்கு எளிதில் நுழைந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் மாணவிகளுக்கு ஒருவித அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதே நிலை நீடித்தால் வருங்காலங்களில் 480-ஆக இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 100 ஆகிவிடும். அதனால் மாணவிகளின் பாதுகாப்பு கருதி உடனடியாக சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும். போலீசார் அவ்வப்போது கண்காணித்து, இங்கு அமர்ந்து மது குடிக்கும் மதுபிரியர்களை விரட்டியடிப்பதுடன், பள்ளிக்கூடம் மினி பாராக செயல்படுவதை தடுக்க வேண்டும். கட்டிட வசதி இல்லாததால் எங்களது குழந்தைகள் கடும் வெயிலில் அமர்ந்தும், மழைச்சாரலில் நனைந்தும் கல்வி பயில்கின்றனர். அதனால் விரைவில் பள்ளிக்கூடத்திற்கு தேவையான வகுப்பறை கட்டிடங்களை கட்டித் தராவிட்டால் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மாட்டோம் என்றாா்.


Next Story